போலி சான்றிதழ்கள் மூலம் சென்னை அண்ணா விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல முயன்ற ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 4 வாலிபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல இருந்த விமான பயணிகளிடம் குடியேற்ற அதிகாரிகள் சோதனை நடத்திய போது குல்பிர் சிங் (25), நிர்மல் சிங் (28), ஜக்பீர் சிங் (30), சங்கவர் சிங் (26) என்ற 4 வாலிபர்கள் போலி சான்றிதழ்கள் மூலம் செல்ல இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
விசாரணையில், மலேசியாவில் வேலை பார்ப்பதற்காக அவர்கள் அனைவரும் போலி சான்றிதழ்கள் கொடுத்து சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தில் கடவுச் சீட்டு பெற்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு மேல் விசாரணைக்காக விமான நிலைய காவல் துறையினர் ஒப்படைக்கப்பட்டனர்.