ஸ்ரீபெரும்புதூரில் ரூ.2000 கோடியில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில்,தொழில்துறை செயலாளர் எம்.எப்.பரூக்கி, சிக்னெட் சோலார் நிறுவனத்தின் தலைவர் பிரபு கோயல் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிக்னெட் நிறுவன தலைவர் பிரபு கோயல், இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 4000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.
2010ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்படும் என்றும் இதன்மூலம் வருடத்திற்கு 300 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்றும் இதனால் கிராமபுற பகுதிகள் அதிக அளவில் பயன்பெறும் என்றார். இந்த ஒப்பந்தத்தின் போது தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.