ஜெயலலிதா மீதான சொத்து வரி வழக்கில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் ஜோதி விலகியதால் புதிதாக நியமிக்கப்பட உள்ள வழக்கறிஞர் வழக்கு விவரங்களை படித்து பார்க்க அவகாசம் வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் கேட்டுக் கொண்டதால் வழக்கு விசாரணையை நீதிபதி ஏப்ரல் 17ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
1993-94ம் ஆண்டிற்கான சொத்துவரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி ஜெயலலிதா மீது வருமான வரித்துறையினர் 1997ல் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனு கடந்த மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்றும் மீண்டும் விசாரணைக்கு வந்தது. எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரேம்குமார் விடுப்பில் சென்றதால் 2வது பொருளாதார குற்றவியல் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் இருந்து விலகிக்கொள்வதாக வழக்கறிஞர் ஜோதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
''இந்த வழக்கில் புதிதாக வழக்கறிஞர் நியமிக்கப்பட வேண்டும் என்பதோடு வழக்கு குறித்த விவரங்களை அவர் படித்து பார்க்க வேண்டும் என்பதால் கால அவகாசம் அளிக்க வேண்டும்'' என்று ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடேசன் கேட்டுக் கொண்டார்.
மேலும், இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 17ஆம் தேதிக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளி வைத்தார்.