அரசாங்க நிலத்தை யார் வாங்கினாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் போது அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டுமே தவிர அரசாங்கம் பழிவாங்குவதாக கருதக் கூடாது என்ற முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மதுராந்தகத்தில் நிலம் வாங்கியிருப்பதில் ஏதோ ஒரு பகுதி நிலம் அரசு புறம்போக்கு நிலம். அதை யாரோ ஏமாற்றி தங்களுடைய நிலம் என்பதாகச் சொல்லி அவரிடம் விற்றிருக்கிறார்கள். இவர் வாங்கும் போது அது எப்படிப்பட்ட நிலம் என்பதையெல்லாம் வழக்கறிஞர்கள் மூலமாக நன்றாக சோதனை செய்து வாங்கியிருக்க வேண்டும்.
அரசாங்க நிலத்தை யாராவது வாங்கியிருந்தாலோ அல்லது அதற்கு உரிமை கோரினாலோ மாவட்ட அளவில் உள்ள அரசு அதிகாரிகள் அது குறித்து நடவடிக்கை எடுக்கும் போது, அதற்கான விளக்கத்தை அளித்து விட்டுப் போக வேண்டுமே தவிர, அரசாங்கமே நேரடியாகத் தலையிட்டு ஏதோ பழிவாங்குவதாக கருதிக் கொள்ளக் கூடாது. அப்படி மக்களிடம் தவறான பிரச்சாரம் செய்வதும் கூடாது.
அவர் தனது பேச்சில் அவரிடம் உள்ள தைரியத்தை யாரும் எடுத்துக் கொள்ள முடியாது என்றெல்லாம் தேவையில்லாமல் பேசியிருக்கிறார். இந்த பிரச்சினையில் அவசரமோ ஆத்திரமோ கொள்ளத் தேவையில்லை. தி.மு.க அரசு ஆட்சியிலே இருக்கும் நேரத்தில் அவசரப்பட்டு சட்ட விதிகளுக்கு புறம்பாக தவறான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஓகனேக்கலுக்கு வந்து ஓகனேக்கல் குடிநீர் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டு மென்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறாரே?
அவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர். அவரது செயல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்திருக்கின்றது. ஓகனேக்கல் திட்டம் தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்கின்ற ஒரு பணி. அதற்கு அகில இந்தியக் கட்சிகளில் ஒன்றான பா.ஜ.க. கர்நாடகாவில் ஆர்ப்பாட்டம் செய்கின்றது. எல்லா பிரச்சினைகளிலும் அனைவரையும் முந்திக் கொண்டு அறிக்கை விடும் தமிழ்நாடு பா.ஜ.க. இதைப் பற்றி வாய்திறவாமல் இருப்பது தான் வருத்தத்தைத் தருகின்றது.
அ.இ.அ..தி.மு.க.விற்காகவும், அதன் தலைவி ஜெயலலிதாவிற்காகவும் வாதாடிய வழக்கறிஞர் ஜோதியின் ராஜினாமா பற்றி? உண்மை புரிவதற்கு திறமை சாலிகளுக்கே காலம் தேவைப்படத்தான் செய்கிறது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.