தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் ஊடுருவலைக் கண்காணிக்க கடலோர பகுதிகளில் 60 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தலைவர் பி. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவையில் ரூ.2.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவல்துறை குடியிருப்பை திறந்து வைத்த பின்பு நேற்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகளின் ஊடுருவல் எதுவும் இல்லை என்றார். ஆனாலும் காவல் துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் 5000 காவல்துறை குடியிருப்பு அமைக்கும் விதமாக ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து காவல் நிலையங்களும் சொந்த கட்டடத்தில் செயல்படும் என்றும் அப்போது அவர் கூறினார்.