''தமிழகத்திற்குள் இருக்கும் ஓகனேக்கலில் கர்நாடக பா.ஜ.க தலைவர் எடியூரப்பா நுழைந்தது அத்துமீறிய செயல்'' என்று தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஓகனேக்கல் தமிழகத்திற்குட்பட்ட பகுதி. தமிழகத்திற்குள் இருக்கும் ஒரு பகுதி. ஆனால் என்ன காரணத்தாலோ, பா.ஜ.க.வினர் அறியாமையில் இருக்கின்றனர், அத்துமீறி நடந்து கொண்டுள்ளனர்.
எல்லைப் பிரச்சினையை எழுப்பினால் கர்நாடக தேர்தலில் ஜெயித்து விடலாம் என யாரோ சிலர் தவறான ஆலோசனையைச் சொல்லியிருக்க வேண்டும். தமிழக பா.ஜ.க.வைப் பொறுத்தவரை எடியூரப்பா, ஓகனேக்கல் வந்து போராட்டம் நடத்தியது கடும் கண்டனத்துக்குரியது, தவறான செயல். ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களது லட்சியம். அதில் தமிழக அரசு எந்த நிலையிலும் மாறுபடக் கூடாது.
முல்லைப் பெரியாறு உள்ளிட்ட கேரளம் தொடர்பான பிரச்சினைகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைதியாக இருப்பது போல எங்களால் இருக்க முடியாது.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள முதல்வரை, தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருபோதும் கடுமையாக விமர்சித்ததில்லை, கண்டித்ததில்லை. அதேபோல காங்கிரஸ் கட்சி கேரளாவில் ஆட்சியில் இருந்தபோதும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக கண்டித்தததில்லை என்று இல.கணேசன் குற்றம் சாற்றியுள்ளார்.