ஏ.டி.எம். கார்டு வடிவில் புதிய வாக்காளர் அடையான அட்டையை விரைவில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது'' என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
மதுரை உள்பட 7 மாவட்ட சட்டமன்ற தொகுதி சீரமைப்பு தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தர்மபுரி ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, திருத்தி அமைக்கப்பட உள்ள சட்ட மன்ற தொகுதிகளின் அடிப்'படையில் வாக்காளர் பட்டியலை திருத்தி அமைக்க வேண்டும் என்றும், அதற்கு ஏற்றவாறு வாக்கு சாவடிகளிலும் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் ஆட்சி தலைவர்களுக்கு நரேஷ் குப்தா உத்தரவிட்டார்.
கூட்டம் முடிந்ததும் நரேஷ் குப்தா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தொகுதி சீரமைப்பு பட்டியல் அடிப்படையில் வாக்காளர் பட்டியல், வாக்குசாவடிகள் மாற்றம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தொகுதி சீரமைப்பு அடிப்படையில் இந்த பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய தேர்தல் ஆணையம் மூலம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் 5 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தொகுதி சீரமைப்பின்படி பொதுமக்கள் பயம் இல்லாமல் வாக்களிக்க அருகருகே வாக்குசாவடிகள் அமைக்க ஆலோசிக்கப்பட்டது. தொகுதி சீரமைப்பின் அடிப்படையில் புதிய வாக்காளர்கள் பட்டியல் தயாரிப்பு பணி முடிந்து விட்டது. இனி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பாக வருகிற மே, ஜூன் மாதங்களில் வாய்ப்பு தரப்படும். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் புதிதாக விண்ணப்பித்து சேர்த்து கொள்ளலாம்.
அதன் பின்னர் தொகுதி சீரமைப்பு அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜூன் மாதம் வெளியிடப்படும். ஏடிஎம் கார்டு வடிவில் புதிய வாக்காளர் அடையாள அட்டையை விரைவில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை பல்வேறு வகையில் பயன் உள்ளதால் இனி வழங்கப்பட உள்ள அடையாள அட்டையில் பிறந்த தேதியும் சேர்க்கப்படும் என்று நரேஷ் குப்தா கூறினார்.