பொடா வழக்குகளை தமிழக அரசே நேரடியாக திரும்பப் பெற முடியாது என்றும் நீதிமன்றம்தான் அதன் மீது தீர்ப்பு கூற வேண்டும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்.
இது பற்றிய முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி, பதில் அறிக்கையில், தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் பத்திரிகை ஒன்றில் எழுதிய கட்டுரையில் தி.மு.க அல்லது அ.இ.அ.தி.மு.க கட்சிகள் ஆட்சியின் போது ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டே வந்துள்ளன என்று எழுதியிருக்கிறாரே?
ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும், பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்' என்று கிராமங்களிலே ஒரு பழமொழி சொல்வார்கள். நண்பர் நெடுமாறனையும், மற்றும் அவர் கட்டுரையிலே குறிப்பிட்டுள்ள நண்பர்களையும் மாதக் கணக்கில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலே அடைத்தவர் ஜெயலலிதா.
தமிழ்நாட்டில் பொடா சட்டத்தின் கீழ் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, அவரது கட்சி தோழர்கள் எட்டு பேர், நான் மற்றும் எங்கள் அமைப்பைச் சேர்ந்த ஐந்து தோழர்கள், நக்கீரன் கோபால் மற்றும் முற்போக்கு இளைஞர் அணியைச் சேர்ந்த ஆறு பெண்கள் உட்பட 21 பேர் ஆக மொத்தம் 42 பேர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் நான் உட்பட எங்கள் 4 பேர் மீது உள்ள பொடா வழக்கு மட்டுமே தி.மு.க ஆட்சி வந்த பிறகு திரும்பப் பெறப் பட்டுள்ளது. ஆனால் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த பரந்தாமன், புதுக்கோட்டை, பாவாணன், வைகோ மற்றும் தோழர்கள், நக்கீரன் கோபால், முற்போக்கு இளைஞர் அணியைச் சேர்ந்த 21 தோழர்கள் மீதுள்ள பொடா வழக்குகள் இன்னமும் திரும்பப் பெறப்படவில்லை' என்று எழுதியுள்ளார்.
42 பேர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகக் கூறுகிறார். 4 பேர் மீதான வழக்குகள் தான் திரும்பப் பெற்றதாகவும் கூறுகிறார். இன்னமும் 21 பேர் மீது வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். 42 பேரில் 4 பேர் மீதான வழக்கு திரும்பப் பெற்று விட்டால் மீதம் 21 வழக்குகள் தானா என்பதை அவரது கட்டுரையைப் படித்தவர்களே பார்த்துச் சிரிப்பார்கள். பொடா வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசே நேரடியாகத் திரும்பப் பெற்றுவிட முடியாது.
நீதிமன்றம்தான் அதன் மீது தீர்ப்பு கூற வேண்டும். அரசைப் பொறுத்தவரையிலே நீதிமன்றத்திலே வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக எழுதிக் கொடுத்தாலும், நீதிமன்றத்திலே அவை நிலுவையிலே இருப்பதற்கு, அரசு என்ன செய்ய முடியும்? இந்த உண்மைகளையெல்லாம் நண்பர் நெடுமாறன் மறைத்துவிட்டு, தி.மு.க அல்லது அ.இ.அ.தி.மு.க ஆட்சியின் போது ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டே வந்துள்ளன என்று கட்டுரை தீட்டுகின்றார் என்றால் நான் தொடக்கத்தில் எழுதிய பழமொழி பொருத்தமாக இருக்கிறதா அல்லவா?
ராமதாசுக்கு பதில்!
இலவசம் கொடுப்பது மலிவான அரசியலா? இல்லாதவர்களுக்கு அதாவது வாங்க இயலாதவர்களுக்கு இலவசமாகக் கொடுப்பது மலிவான அரசியல் அல்ல. வாங்க இயலாதவர்களை, வாங்கக்கூடிய அளவிற்கு முன்னேற்றிட வேண்டும் என்பது முக்கியம்தான்.
அதற்கு கால அவகாசம் தேவைப்படும். அந்த கால அவகாசம் வருகின்ற வரை அவர்களுக்கு இலவசமாக அளிப்பது ஒன்றும் மாபெரும் தவறல்ல. வேலை வாங்கிக்கொள்வார்கள்தான். ஆனால் தமிழ்நாட்டிலே உள்ள அத்தனை வேலையில்லாதவர்களுக்கும் ஒரே நாளில் வேலை கொடுப்பது என்பது சாத்தியமான காரியமா வேலையில்லாதவர்களுக்கு வேலை கொடுக்கின்ற பணியிலும் தான் ஈடுபட்டிருக்கிறோம்.
அதேநேரத்தில் சிலவற்றை இலவசமாக கொடுக்கவும் செய்கிறோம். இலவசமாக கொடுப்பது மலிவான அரசியல் என்றால், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பது கூட மலிவான அரசியல் என்றாகிவிடும் அல்லவா? என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.