தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு ஆளும், எதிர்கட்சிகளின் சார்பில் 6 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அனைவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.
மாநிலங்களவைத் தேர்தலிற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் சார்பில் 6 வேட்பு மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை தேர்தல் அதிகாரியும், சட்டசபை செயலருமான செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதனால் அந்த 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மாநிலங்களவை தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மார்ச் 8ம் தேதி தொடங்கியது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
தி.மு.க. கூட்டணி 5 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் தி.மு.க., காங்கிரசுக்கு தலா 2 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வைச் சேர்ந்த ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே. ரங்கராஜன் ஆகியோர் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். அ.இ.அ.தி.மு.க. சார்பில் நா.பாலகங்கா வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக, அ.இ.அ.தி.மு.க.கூட்டணியில் 2வது வேட்பாளரை நிறுத்த தோழமை கட்சியான ம.தி.மு.க. மறுத்துவிட்ட நிலையில், தோழமை கட்சிகளைச் சேர்ந்த யாராவது ஒருவரை நிறுத்த அ.இ.அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.