சென்னை அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகத்தில் இரு பிரிவு ஊழியர்களுக்கிடையே இன்று நடந்த மோதலில் சிற்றுண்டி கடைக்கு தீவைக்கப்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் மிகப் பெரிய வணிக வளாகம் ஸ்பென்சர் பிளாசா உள்ளது. இங்கு ஆயிரக்கணக் கான கடைகள் உள்ளது. எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இந்த வணிக வளாகத்தில் காணப்படும்.
அங்குள்ள காஷ்மீர் கைவினைப் பொருட்கள் விற்பனை நிலைய ஊழியர்களுக்கும், அருகில் உள்ள சிற்றுண்டி கடை ஊழியர்களுக்கும் இடையே இன்று திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது இரு ஊழியர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர். அங்கிருந்த பொருட்கள் அடித்து உடைக்கப்பட்டது. கண்ணாடி, சேர் உள்ளிட்ட பொருட்கள் உடைக்கப்பட்டு சிதறிக் கிடந்தன.
இந்த மோதலில் சிற்றுண்டி கடைக்கு தீவைக்கப்பட்டது. அதை பார்த்த பொது மக்கள் பதறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இது பற்றி உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து தீயை அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.