பாலியல் குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாக்டர் பிரகாஷின் மருத்துவப் பதிவை தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் நிரந்தரமாக ரத்து செய்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் தலைவர் மருத்துவர் கே.பிரகாசம், துணைத் தலைவர் எம்.எஸ்.அஷ்ரஃப் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது புழல் சிறையில் உள்ள பாலியல் குற்றவாளி பிரகாஷின் மருத்துவப் பதிவை நிரந்தரமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.
இனி அவரால் எந்தக் காலத்திலும் மருத்துவத் தொழிலைச் செய்ய முடியாது. பதிவு ரத்து செய்யப்பட்ட நடவடிக்கை அவருக்கு கடிதமாக அனுப்பப்படும். சுகாதாரத் துறைச் செயலருக்கும் தகவல் அனுப்பப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்படும்.
சிறுநீரக தான மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சென்னை பரங்கிமலை செயின்ட் தாமஸ் மருத்துவமனையைச் சேர்ந்த சிறுநீரக மருத்துவர் ரவிச்சந்திரனிடம் விளக்கம் கேட்டு இரண்டு தாக்கீதுகளை தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் அனுப்பியது. இந்த தாக்கீதுகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
கவுன்சிலின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன்பு, அவரை விரைவில் ஆஜர்படுத்தி விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவர்கள் தங்களது திறமைகளை, சாதனைகளை விளம்பரப்படுத்தி தங்கள் மருத்துவமனைக்கு நோயாளிகளை வரவழைக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது.
பொது மக்களுக்குப் பயனுள்ள வகையில் மருத்துவக் கட்டுரைகளை மருத்துவர்களின் படம் இன்றி அவர்களது பெயரில் வெளியிடுவதில் தவறில்லை. மருத்துவர்களின் தவறான விளம்பரங்கள் குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
காவல் துறையில் மது ஒழிப்புப் பிரிவு உள்ளது போன்று, தவறு செய்யும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், போலி மருத்துவர்களை ஒழிக்கவும் சட்டம் கொண்டு வந்து அதிகாரம் கொண்ட புதிய பிரிவை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் கூறினார்.