பால் விலையைப் பொறுத்தவரை ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் இரண்டு மோசடிகளைச் செய்த பெருமைக்குரியவர். இதையெல்லாம் மக்கள் மறந்து விட்டார்கள் என்று கருதிக் கொண்டு அறிக்கையிலே எப்போதும் போல் பொய் புராணம் தீட்டியிருக்கிறார் ஜெயலலிதா என்று முதலமைச்சர் கருணாநிதி குற்றம் சாற்றியுள்ளார்
இது குறித்து முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி, பதில் அறிக்கையில், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பாலின் கொள்முதல் விலையை மட்டுமே, தான் உயர்த்தியதாகவும், விற்பனை விலையை உயர்த்த வில்லை என்றும் அறிக்கை கொடுத்திருக்கிறாரே?
இது முழு பூசணிக்காயை இலைச் சோற்றிலே மறைக்கும் மோசடி என்று அந்தத் துறையின் அமைச்சர் மதிவாணன் விளக்கமாகச் சொல்லியிருந்த போதிலும் அது பல ஏடுகளிலே வெளி வரவில்லை. பால் விலையைப் பொறுத்தவரை ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் இரண்டு மோசடிகளைச் செய்த பெருமைக்குரியவர்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொள்முதல் விலையை உயர்த்தாமலேயே விற்பனை விலையை மட்டும் உயர்த்திய நிகழ்ச்சி நடைபெற்றதுண்டு. 1.7.1993ல் கொள்முதல் விலையை ஒரு பைசா கூட உயர்த்தாமலேயே, விற்பனை விலையை மட்டும் லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் உயர்த்தியவர் தான் ஜெயலலிதா.
1991-96ம் ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சியிலே இருந்த போது பசும்பால் கொள்முதல் விலை 2 ரூபாய் 26 காசு அளவிற்கு உயர்த்தப்பட்டது. ஆனால் நுகர்வோரிடம் லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் என்று உயர்த்தி விற்பனை செய்ய ஆணை பிறப்பித்தவர் தான் ஜெயலலிதா.
அடுத்து கொள்முதல் விலையை குறைந்த அளவிற்கு உயர்த்தி விட்டு, விற்பனை விலையை அதிக அளவிற்கு கூடுதலாக நிர்ணயம் செய்ததற்கு உதாரணம் கூற வேண்டுமேயானால், 1.12.2001 அன்று கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ஐம்பது பைசா மட்டுமே உயர்த்தி விட்டு, விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் அளவிற்கு உயர்த்தியவர் தான் ஜெயலலிதா.
இதையெல்லாம் மக்கள் மறந்து விட்டார்கள் என்று கருதிக் கொண்டு அறிக்கையிலே எப்போதும் போல் பொய் புராணம் தீட்டியிருக்கிறார் ஜெயலலிதா என்று முதலமைச்சர் கருணாநிதி குற்றம் சாற்றியுள்ளார்.