''மாநகராட்சியில் தினக் கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் 2,025 பேர் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்'' என்று மேயர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பல்வேறு உறுப்பினர்கள் புதிய வரிகள் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
முதலாவதாக தி.மு.க. உறுப்பினர் சுரேஷ்குமார் பேசுகையில், மயானங்களில் உடலை புதைக்கவோ, எரிக்கவோ கட்டணங்கள் இல்லை என்பது போன்ற அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்தார்.
இதே போல காங்கிரஸ் உறுப்பினர் கோவிந்தசாமி, தி.மு.க உறுப்பினர் தனசேகரன், எம்.ஜி.ஆர் கழகத்தை சேர்ந்த உறுப்பினர் துரைராஜ், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சுப்பிரமணி ஆகியோர் கேட்ட கேள்விக்கு மேயர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசியதாவது:
சென்னையில் 36 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டுவதற்கு டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. அவைப் பெறப்பட்டதும் விரைவில் கட்டி முடிக்கப்படும். அதி நவீன பேருந்து நிழற்குடைகள் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இதில் தீர்ப்பு வந்ததும் விரைவில் அவை கட்டி முடிக்கப்படும்.
மாநகராட்சியில் தினக் கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் 2,025 பேர் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 500 பேர் இந்த மாதம் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று மேயர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.