மதுரை மாவட்டத்தில் உள்ள பெருமை மிக்க அழகர் கோயிலில், பசு கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 50 பசுக்கள் போதிய உணவு வழங்காமை, உரிய பராமரிப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பரிதாபமாக பலியாகி உள்ளன.
இதில், போதிய உணவு வழங்காததால் நேற்றும் நான்கு பசுக்கள் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், 150 பசுக்கள் மட்டுமே அடைக்கப்படக்கூடிய அளவில் வசதி உடைய இந்த கொட்டகையில் 400 பசுக்களை அடைத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் அந்த பசுக்களை பராமரிக்க போதிய ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
திருவிழாக் காலங்களில் இந்த பசுக்களை பயன்படுத்தி கோயில் நிர்வாகம் நல்ல வருமானம் ஈட்டி வருகிறது. இந்த வருமானத்தைப் பயன்படுத்தி பசு கொட்டகையை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. எனினும் பசுக்கள் இறந்தது பற்றி கோயில் நிர்வாகம் எந்தவித தகவலையும் அளிக்க மறுத்துவிட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் ராமநாதபுரம் ராமசுவாமி கோயிலில் சரியான உணவு வழங்காமை, உரிய பராமரிப்பின்மை காரணமாக பக்தர்கள் வழங்கிய 15 பசுக்கள் இறந்தது. அந்த வகையில் தமிழகத்தில் இரண்டாவது நிகழ்வாக அழகர் கோயில் 50 பசுக்கள் இறந்த இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.