''ராஜ்ய சபை தேர்தலை பொருத்தவரை 15ஆம் தேதிக்குள் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதியதால் அதுவரை காத்திருப்பதாக கூறினோம். அரசியல் வெளிப்பாடு, முன்னேற்றமான சூழ்நிலை காரணமாக இன்று முடிவு செய்கிறோம்'' என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க.வின் பொது நிதிநிலை அறிக்கை ஒன்றையும், வேளாண்துறைக்கு என தனியான நிதிநிலை அறிக்கையையும் மருத்துவர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். இதனை பா.ம.க தலைவர் கோ.க.மணி பெற்றுக் கொண்டார்.
இந்த பட்ஜெட்டுகளில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சம் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆரம்பக் கல்விக்கு என தனி அமைச்சகம் தேவை. இது எங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. டாஸ்மாக் கடைகளை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்து வியாபாரம் செய்ய வேண்டும். சனி, ஞாயிறு, பண்டிகை நாட்களில் கடைகளை திறக்கவே கூடாது.
தமிழ்நாட்டில் 15 வயது முதல் உள்ள சிறுவர்கள் கூட குடிக்கிறார்கள். இன்று மது தண்ணியில் தமிழகமே தள்ளாடுகிறது; தடுமாறுகிறது என்று சொல்லி வந்தேன். இப்போது அந்த நிலை மாறி தண்ணியில் தமிழகமே மூழ்கி போயுள்ளது.
பசிப்பவனுக்கு மீனை தருவதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுங்கள் என்ற நிலையில் இந்த அரசின் செயல்பாடுகள் இல்லை. இலவச கலர் டி.வி வழங்குவது தேவையற்ற ஒன்று. அதற்கு பதிலாக வறுமையில் உள்ள குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரலாம்.
ராஜ்ய சபை தேர்தலை பொருத்த வரை இன்று இரவு பா.ம.க.வின் அவசர நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறுகிறது. 15ஆம் தேதிக்குள் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதியதால் அதுவரை காத்திருப்பதாக கூறினோம். அரசியல் வெளிப்பாடு, முன்னேற்றமான சூழ்நிலை காரணமாக இன்று முடிவு செய்கிறோம்.
தி.மு.க அரசின் கடந்த 2 பட்ஜெட்டிலும் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்கள் தான் அமல்படுத்தப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவோ, வேலை வாய்ப்பை பெருக்கவோ எந்த நடவடிக்கையும் இல்லை.
விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு
தமிழகத்தில் தினம் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கற்பழிப்பு போன்ற சமூக விரோதச் செயல்கள் பெருகி வருகின்றன. இதை கட்டுப்படுத்திட நிரந்தர வழி முறைகளை, புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் விவசாயிகளின் தற்கொலை அதிகளவில் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. இது பற்றிய சரியான புள்ளிவிவரங்கள் நமக்கு கிடைக்கவில்லை. பாதிக்கப் பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.