சென்னை மாநகராட்சியில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லாமல் பழைய வரிவிகிதங்களை உயர்த்தாமல் சாதாரண மக்களை பாதிக்காத வகையில் அமைந்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் தொடங்கியது. மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி முன்னிலை வகித்தார். துணை மேயர் சத்யபாமா, ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
2008-09ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதிநிலை குழு தலைவர் ராதாசம்பந்தம் தாக்கல் செய்தார். முன்னதாக மேயர் மா.சுப்பிரமணியன் ஆற்றிய தொடக்க உரையில் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை குறித்து விளக்கி பேசியதாவது:
27 மாநகராட்சி மேனிலைப் பள்ளிகளில் பயின்று பிளஸ்2 தேர்வு எழுதி ஒவ்வொரு பள்ளியிலும் முதலிடம் பெறுவோருக்கு கம்ப்யூட்டர் பரிசு.
மாநகராட்சி பள்ளிகளில் படித்து 10ம் வகுப்பு தேர்வு எழுதி 500க்கு 400 மதிப்பெண்ணுக்கு மேல் பெறுபவருக்கு தலா 10,000 ரூபாய் ரொக்கப்பரிசு.
பிளஸ்2 தேர்வில் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கப்பரிசும், ஒவ்வொரு பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுபவர்ளுக்கு 500 ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
மாநகராட்சி சமுதாயக் கல்லூரிகளில் அதிகளவில் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய புதிய பாடத்திட்டங்கள் தொடங்கப்படும். வடசென்னையில் மேலும் ஒரு சமுதாயக் கல்லூரி தொடங்கப்படும்.
இயலா குழந்தைகள் பேச்சுத்திறன் பயிற்சி, உடல் வள பயிற்சி பெறுவதற்கு தனியார் பயிற்சி மையங்களுக்கு சென்று வர அக்குழந்தைகளின் பெற்றோரில் ஒருவருக்கும், அக்குழந்தைக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
கொசுக்களை கட்டுப்படுத்துவதற்காக சுயஉதவி குழுவினருக்கு சிறிய புகை பரப்பும் கருவிகளும், கொசுக்கொல்லி மருந்துகளும் இலவசமாக வழங்கப்படும்.
மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுப்பைகள் வழங்கப்படும்.
தண்டையார் பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை 4 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் மாற்றி அமைக்கப்படும்.
மாநகராட்சி பணியாளர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று மேயர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்த பட்ஜெட் புதிய வரிகள் இல்லாமல் பழைய வரிவிகிதங்களை உயர்த்தாமல் சாதாரண மக்களை பாதிக்காத வகையில் அமைந்துள்ளது. இந்த நிதியாண்டில் மூலதன செலவினங்களுக்காக திருத்திய மதிப்பீட்டில் ரூ.288 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.