சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த பாண்டியன் விரைவு இரயில் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த பாண்டியன் விரைவு இரயில் வண்டி திண்டுக்கல் அருகே தாமரபாடி-வடமதுரை இரயில் நிலையம் இடையே இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது இரயில் என்ஜினுக்கு அடுத்து உள்ள பயணிகள் பெட்டியில் ஏற்பட்ட மின்கோளாறு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது.
பெட்டியில் தீ எரிவதை கண்ட ஓட்டுனர்களில் ஒருவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் அவசர அவசரமாக இரயில் வண்டியை நிறுத்தினார். இதையடுத்து வாடாமதுரை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதையடுத்து அந்த பெட்டி மட்டும் கழற்றி விடப்பட்டு மற்ற பெட்டிகள் அருகிலுள்ள வாடாமதுரை இரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பெட்டிகள் சரிசெய்யப்பட்டு நான்கு மணி நேரத்துக்குப் பிறகு பாண்டியன் விரைவு இரயில் மதுரை சென்றடைந்தது.
இதனால், சென்னை செல்லும் வைகை விரைவு இரயில் 90 நிமிடமும், திண்டுக்கல்-திருச்சி பயணிகள் இரயில் 2 மணி 40 நிமிடங்களும் திண்டுக்கல் இரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
பாண்டியன் விரைவு இரயில் திண்டுக்கல் வந்தடைந்ததும், திண்டுக்கல்லில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரயில்கள் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டன. இதனால் திருச்சி சந்திப்பு, திண்டுக்கல் இடையேயான இரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பயணிகள் யாருக்கும் எந்தவித காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. இரயில்வே உயர் அதிகாரிகள் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து தீ விபத்து ஏற்பட்டது குறித்து விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.