''நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு பால் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் சிறப்பு ஆணையர், செயலாளர் லீனா நாயர் வெளியிட்ட அறிக்கையில், பால் கொள்முதல் விலை பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 மற்றும் எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 என்று உயர்த்தியதன் விளைவாக பால் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ஆவின் சமன்படுத்திய பால் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 மட்டும் அரசு உயர்த்தியுள்ளது.
சில மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் தங்களது மாவட்ட சூழ்நிலைக்கேற்ப நிர்ணயித்த விலைகள் இணையத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலை அளவிலிருந்து சற்று வேறுபட்டுள்ளது. இதன் காரணமாக சில மாவட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் சில வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.
இது அரசின் கவனத்திற்கு வரப் பெற்றவுடன், உடனடியாக வேறுபாடுகளை களைந்து பால் வகை, பால் அட்டை மற்றும் ரொக்க விற்பனை என்ற அடிப்படையில் இணையம் நிர்ணயித்துள்ள விலைக்கு மிகாமல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் சரியான விற்பனை விலையை நிர்ணயித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாற்றியமைக்கப்பட்ட விற்பனை விலை விபரங்கள் அந்தந்த மாவட்ட ஒன்றியங்களின் தனி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் செய்தியாக வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
சென்னையைப் பொறுத்தவரையில் சமன்படுத்திய பால்தான் அதிகம் விற்கப்படுகிறது. நுகர்வோரிடம் இருந்து ஆவின் பால் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் வந்ததையடுத்து அரசும் ஆவின் நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆவின் பாலை சரியான விலைக்கு விற்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. நுகர்வோரிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் அதிகபட்ச சில்லரை விலைக்கு மேல் விற்கும் விற்பனையாளர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறை மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி சென்னையில் 25 சில்லரை விற்பனையாளர்கள் மீது அதிக விலை வசூலித்தமைக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் தங்களது புகார் மற்றும் கருத்துக்களை, ஆவின் 24 மணிநேர நுகர்வோர் நலன் மற்றும் சேவை பிரிவில் உள்ள 1800 425 3300 என்ற இலவச தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.