''கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் பெரிய அளவில் மின் உற்பத்தி நிறுவனங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படாததே மின்சார தட்டுப்பாட்டுக்கு காரணமாகும்'' என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குற்றம்சாற்றியுள்ளார்.
இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கோடைக்காலத்தில் அதிகரித்து வரும் மின்தேவையை சமாளிக்கவும், தேர்வு நடைபெறும் மார்ச் மாதத்தில் மாணவர்களின் நலனுக்காக இரவு நேரங்களில் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அனைத்து தொழிற்சாலைகளும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த நடைமுறை கடந்த 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு எந்த பகுதியிலும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் பெரிய அளவில் மின் உற்பத்தி நிறுவனங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படாததே தற்போதைய நிலைக்கு காரணமாகும்.
மத்திய அரசின் 2005ம் ஆண்டு மின்சார சட்டத்தின்படி மின் விநியோகம், மின் உற்பத்தி பிரிவுகளை தனியாக பிரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல மாநிலங்களில் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் டிரான்ஸ்மிஷின் கார்ப்பரேஷன் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதன் தலைவராக மின்சார வாரிய தலைவர்தான் செயல்படுவார். எக்காரணத்தை கொண்டும் இந்த புதிய நிறுவனம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.