தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக டி.கே.ரங்கராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் என்.வரதராஜன் விடுத்துள்ள அறிக்கையில், நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜனை மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவது என கட்சியின் மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1941ல் பிறந்த டி.கே.ரங்கராஜன், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1964-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றிய போது, அதில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றினார்.
பல்வேறு தொழிற்சங்கங்களுக்குத் தலைவராக இருந்தவர். தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறை சென்றுள்ளார். அ.இ.அ.தி.மு.க ஆட்சியின் போது வேலைநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்காக இதர மத்திய தொழிற்சங்க அமைப்புகளுடன் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த பாடுபட்டவர். இவருக்கு விஜயா என்ற மனைவியும், ரவிராஜன், ஸ்ரீவத்ஸன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.