''தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதில் கருணாநிதி கவனம் செலுத்தி மின்சார விடுமுறை அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்'' என்று அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது அனைத்து உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மின்சார விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்நாளில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மின்வாரிய இணைப்பிலிருந்து மின்சாரத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்வாரியத்தின் மின் வினியோகத்தை பயன்படுத்தாமல் ஜெனரேட்டர்களை பயன்படுத்துமாறு அனைத்து தொழிற்சாலைகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. வெகு விரைவில் வீட்டு உபயோகிப்பாளர்களுக்கும் இதே நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின் உற்பத்தியை பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதில் கருணாநிதி கவனம் செலுத்தி மின்சார விடுமுறை அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவார்த்து கொடுக்கும் முயற்சியை உடனடியாக அரசு கைவிட வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி அ.இ.அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.