சென்வாட் வரியை குறைக்கக் கோரி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் திங்கட்கிழமை அடையாள வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
இந்த வேலை நிறுத்தம் குறித்து சிவகாசியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அனைத்திந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் கூறியிருப்பதாவது.
தற்போது விதிக்கப்படும் சென்வாட் (மத்திய மதிப்பு கூட்டு வரி) முறையால், சிறு தீப்பெட்டித் தொழிற்சாலைகள் ரூ. 120 கோடி அளவுக்கு வரி செலுத்தாமல் தப்பிப்பதற்கு வழி செய்கிறது.
தீப்பெட்டி தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை சில தயாரிப்பு செய்முறைகள் கைத்தொழிலாகவும், சில தயாரிப்புகள் இயந்திரங்கள் மூலமாகவும் செய்யப்படுகின்றன.
அமைப்பு சார்ந்த தொழிற்சாலைகளில் தீக்குச்சிகளை அடுக்குதல், மருந்து தேய்த்தல் ஆகியப் பணிகள் இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. சில தொழிற்சாலைகள் தேய்த்த தீக்குச்சிகளை பெட்டிக்குள் அடைப்பதையும் இயந்திரமாக்கி விட்டன.
இந்நிலையில் அமைப்பு சாராத சிறு தொழிற்சாலைகளும் இயந்திரத்தின் மூலம் தீக்குச்சிகளை உற்பத்தி செய்து, அவற்றை வணிக புறச்சேவை முறையில் சிறிய தொழிற்சாலைகள் மூலம் தீப்பெட்டிகளாக்கி, கையினால் செய்த தீப்பெட்டி எனக் கூறி வரி விதிப்பிலிருந்து தப்பித்து விடுகின்றனர்.
அமைப்பு சார்ந்த தொழிற்சாலைகளுக்கும், அமைப்பு சாராத தொழிற்சாலைகளுக்கும் தயாரிப்பு அளவைப் பொறுத்தவரை சிறிய வேறுபாடே உள்ளது.
2003-ம் ஆண்டு வரை தீப்பெட்டித் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யப்படும் எண்ணிக்கைக்குத் தக்கவாறு வரி விதிப்பு நடைமுறையில் இருந்தது. ஆனால், 2003-ம் ஆண்டுக்குப் பின்னர் விலைக்குத் தக்கவாறு, சென்வாட் வரி விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது.
மின் சக்தியைப் பயன்படுத்தாமல் தயாரிப்பு முறைகளை மேற்கொள்ளும் தொழிற்சாலைகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டது. இதை அமைப்பு சாராத தொழிற்சாலைகள் தவறாக பயன்படுத்தி வரிச் சலுகையை பெற்றுவருகின்றன.
எனவே உண்மையாக வரி செலுத்துகின்ற தயாரிப்பாளர்களின் நலன் கருதி தற்போதுள்ள 12 சதவீத சென்வாட் வரியை, 4 சதவீதமாகக் குறைக்கவேண்டும்.
சிறு தொழில்களுக்கு அளிக்கப்படும் முழு வரிச் சலுகையைத் தவிர்த்து, அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் 4 சதவீத சென்வாட் வரியை விதிக்கவேண்டும் என்று கூறியுள்ளன.