தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் மத்திய அரசு தள்ளுபடி செய்யக் கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயிகள் தேசிய வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து விவசாய கடன்களையும் மத்திய அரசு, முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.1,500, மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.4,000, மரவள்ளி டன்னுக்கு ரூ.4,000, கரும்பு டன்னுக்கு ரூ.1,500யை கொள்ளுமுதல் விலையாக தரவேண்டும். எருமைப் பால் லிட்டருக்கு ரூ.20ம், பசும்பால் ரூ.15ம் ஆதார விலை தர வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை மத்திய திட்டக்குழு ரத்து செய்ய முயற்சிப்பதை அரசு கைவிட வேண்டும்.
நொய்யல், காலிங்கராயன் நீர் ஆதாரங்களில், சிப்காட் சுற்றுப்பகுதிகளில் சாய தோல் சுத்தப்படுத்துதலை உடனடியாக தடுக்க வேண்டும். ஈரோடு நகரை சுற்றி அமையும் ரிங் ரோடுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும். ஏற்கனவே உள்ள சாலைகளை அகலப்படுத்தி அதில் ரிங் ரோடு அமைக்க வேண்டும்.
கரும்பு சாறில் இருந்து நேரடி எத்தனால் தயாரிக்க அரசு அனுமதிக்க வேண்டும். கூட்டுறவு வங்கி பத்திர ஈட்டுக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மின்சார தட்டுப்பாடு, உரத்தட்டுப்பாடை நீக்க வேண்டும் ஆகியன கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, ஒன்றியத் தலைவர்கள் ஈரோடு ஈஸ்வரன், பெருந்துறை சுப்பிரமணியன், கொடுமுடி பெரியசாமி, சத்தி நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழ்பவானி பாசனத் தலைவர் நல்லசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.