ஒரு வாரத்திற்கு ஒருநாள் மின்தடை என்ற அரசு உத்தரவை ரத்து செய்யக் கோரி சேலத்தில சிறு விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் அம்மாபேட்டை பகுதிக்கு உட்பட்டு அம்மாபேட்டை காலனி, காமராஜர் நகர் காலனி, வ.உ.சி., நகர், பெரியார் நகர், சித்தி விநாயகர் கோயில் தெரு, மாரியப்பன் நகர் உட்பட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் பத்தாயிரம் சிறுவிசைத்தறிகள் கூடங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது நிலவும் மின் பற்றாக்குறையால் இப்பகுதிகளில் தினசரி காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை, மூன்று மணி நேரத்துக்கு அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது.
இந்த மின்வெட்டு காரணமாக ஜவுளி உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறுவிசைத்தறி மூலம் உற்பத்தியாகும் ஜவுளி ரகங்கள், அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மின்தடை காரணமாக ஏற்படும் காலதாமத்தால் உற்பத்தி இலக்கை அடைய முடியாததால், குறிப்பிட்ட காலத்துக்குள் டெலிவரி செய்ய முடியவில்லை. இத்தகைய காலதாமதத்தால் கொள்முதல் விலையைவிட குறைத்து வழங்குவதால் விசைத்தறி உரிமையாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த இழப்பை ஈடுகட்டுவதற்கான மாற்றுவழியும் அவர்களின் கைவசம் இல்லை. தற்போது, லாபம் இல்லாமலேயே விசைத்தறி கூடங்களை இயக்க வேண்டிய பரிதாப நிலைக்கு சிறுவிசைத்தறி உரிமையாளர் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இனி நாள்தோறும் மாலை 6 மணி முதல் 10 வரை மின்சப்ளையை பயன்படுத்தக்கூடாது என்ற மின்வாரியத்தின் அதிரடி அறிவிப்பு சிறுவிசைத்தறி உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு வாரமும் புதன் தோறும் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை மின்சாரத்தை பயன்படுத்த கூடாது என்றும், அதற்கு மாற்றாக, அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப ஜெனரேட்டர் உபயோகப்படுத்தி தொழில் செய்து கொள்ளலாம் என்றும் உத்தரவு பிறப்பித்து, அதற்கான ஆணையை விசைத்தறி உரிமையாளர்களுக்கு வீடுதேடி சென்று வழங்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் இந்த கிடுக்கிபிடி உத்தரவு சிறுவிசைத்தறி உரிமையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை கண்டித்து சிறுவிசைத்தறி உரிமையாளர்கள் ஏராளமானோர் சேலம் உடையாப்பட்டியில் உள்ள வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை தொடர்பாக வட்ட மேற்பார்வைபொறியாளர் கோபாலகிருஷ்ணனிடம் மனு கொடுத்தனர்.