''உலக மகளிர் தின நாளில் தமிழக மகளிர் அனைவரும் சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் முன்னேற்றம் எய்திட என் உளமார வாழ்த்துகிறேன்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
உலக மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மகளிர் சமுதாய முன்னேற் றத்தை வலியுறுத்திடும் உலக மகளிர் நாள் விழா மிகுந்த மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் நெசவாலைகளில் பணிபுரிந்த மகளிர் பலர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டுமணி நேர வேலை முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கிய நாள், 1857 ஆம் ஆண்டு மார்ச்சுசுத் திங்கள் 8 ஆம் நாள்! பின்னர் அந்நாளே உலக மகளிர் நாளாக ஆண்டுதோறும் கடைப் பிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை வளர்த்திடப் பெரிதும் பயன்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்த வரை தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் அறிவிறுத்திய சமத்துவ, சம தர்மக் கொள்கைகளின்படி, பெண்கள் சமுதாயம் ஆண்களுக்கிணையாக முன்னேற்றம் காண்பதற்குக் கல்வியறிவு பெற்று, வேலைவாய்ப்புகள் எய்தி, பொருளாதாரத் தன்னிறைவு பெற வேண்டும் என்பதற்காகத் தி.மு.க. அரசு இந்தியாவின் இதர மாநிலங் களுக்கெல்லாம் வழிகாட்டிடும் வகையில்,
1973-ல் காவல் பணியில் மகளிர் நியமனத்திட்டம், 1989-ல் மகளிர் மேம்பாட்டுத் திட்டம், 10-ம் வகுப்பு வரை படித்த ஏழைப்பெண்களின் திருமணங்களுக்கு 1989-ல் 5 ஆயிரம் ரூபாயும், 1996-ல் 10 ஆயிரம் ரூபாயும் வழங்கி, 2006-ல் 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்.
1989-ல் ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப்படிப்பு திட்டம், 2007-ல் இத்திட்டம் முதுகலை பட்டப்படிப்பு வரை நீட்டிப்பு. 1990-ல் அரசு வேலை வாய்ப்புகளில் மகளிருக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம். அதே ஆண்டில் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை அளித்திடும் தனிச் சட்டம்.
1996-ல் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம். 2006-ல் இந்த அரசு பொறுப்பேற்றபின் ஏழை, எளிய தாய்மார்கள் மனம் மகிழ இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம். எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் திட்டம்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களைப் புதிது புதிதாக உருவாக்கி நடைமுறைப்படுத்தியுள்ளதன் மூலம் பெண்கள் சமுதாயம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. பெண்கள் மேலும் ஏற்றம் பெறும் வகையில் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்திட மத்திய அரசு வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொண்டாடப்படும் இந்த ஆண்டின் உலக மகளிர் நாள் விழா தமிழகம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் நிகழ்ந்திடவும், தமிழக மகளிர் அனைவரும் சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் முன்னேற்றம் எய்திடவும் இந்நன்னாளில் என் உளமார வாழ்த்து கிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.