கள்ளக்காதலியையும், அவரது மகனையும் குத்தி கொலை செய்த வாலிபருக்கு ஈரோடு விரைவு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது.
ஈரோடு அருகே காலிங்கராயன்பாளையம் பாரதிநகர் அருளரசி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயா (21). இவரது கணவர் பழனிச்சாமி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். விஜயா தனது மகனுடன் வசித்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மாணிக்கம் (21). உணவு விடுதி ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் விஜயாவுக்கும், மாணிக்கத்துக்கும் இடையே கள்ளகாதல் ஏற்பட்டது. மாணிக்கத்திடம் அடிக்கடி விஜயா செலவுக்கு பணம் கேட்பார். 2007ம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இரவு, விஜயா வீட்டுக்கு மாணிக்கம் சென்றார். அப்போது விஜயா ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். பணம் கொடுக்க மாணிக்கம் மறுத்து விட்டார்.
அப்போது நடந்த தகராறில் விஜயாவை மாணிக்கம் கத்தியால் குத்தி கொலை செய்தார். சத்தம் கேட்டு எழுந்த விஜயாவின் மகன் கதிரவனும் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து மாணிக்கத்தை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு ஈரோடு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி மஞ்சுளா விசாரணை செய்தார். தாயையும், மகனையும் கொலை செய்த மாணிக்கத்துக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.