தமிழக அரசு வெளியிட்ட சொத்து வரி பொது சீராய்வு குறித்து அராசாணையை எரித்த வழக்கு தொடர்பாக மாநகராட்சி உறுப்பினர்கள் மூவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
ஈரோடு மாநகராட்சி கூட்டம் மேயர் குமார்முருகேஸ் தலைமையில் கடந்த மாதம் 29ஆம் தேதி நடந்தது. அப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு (தேர்தல்) துறை அரசாணை எண்.150 நாள் 12.11.2007ன்படி மாநகராட்சி எல்லையில் உள்ள சொத்துக்களுக்கு 1.4.2008 முதல் சொத்து வரி பொது சீராய்வு பணி மேற்கொள்ள தேவையான சுய மதிப்பீட்டுப் படிவம்,
வரிவிதிப்பு கணக்கீட்டுப் படிவம் மற்றும் திருத்தம் அறிவிக்கை போன்ற படிவங்கள் அச்சடிக்கவும், நாளிதழ்களில் விளம்பரம் செய்யவும், செலவினத்துக்கு மாமன்ற ஒப்புதல் வேண்டப்படுகிறது என்ற தீர்மானம் மன்ற பார்வைக்கு வந்தது.
இந்த தீர்மானத்தை எதிர்த்து சுயேச்சை உறுப்பினர் ராதாமணி பாரதி, தே.மு.தி.க., கோவேந்தன், அ.தி.மு.க., உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அரசு ஆணையை மாநகராட்சி வளாகத்தில் தீயிட்டு எரித்தனர்.
இது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் செல்வராஜ், ஈரோடு நகர காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 285ன் கீழ் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராதாமணிபாரதி, செந்தில்குமார், கோவேந்தன் ஆகிய மூவரும் ஈரோடு ஜே.எம். முதலாவது மாஜிஸ்திரேட் அசோகன் முன்னிலையில் சரணடைந்தனர்.