''மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளப்பட வில்லை என்று ராமதாஸ் கூறியிருப்பது தவறானது'' என்று தா. பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாநிலங்களவை தேர்தல் தொடர்பாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் தி.மு.க எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவில்லை என்று கூறியிருப்பது தவறானது.
சட்டமன்ற தேர்தலின் போது எங்கள் கட்சியின் மேலிடத்தில் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு முதலில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான சீட் வழங்கப்பட்டு, டி.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த ஒப்பந்தத்தின்படி தற்போது மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு உறுப்பினர் பதவிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து தி.மு.க கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தெரியும். பா.ம.க.வுக்கு ஏற்கனவே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு, அதில் ராமதாசின் மகன் அன்புமணி எம்.பி.யாகி தற்போது மத்திய அமைச்சரவையில் முக்கிய பதவியில் இருக்கிறார்.
எனவே தற்போது நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வெற்றி பெறுவதற்கு பா.ம.க ஒத்துழைப்பு தர வேண்டும்.
சேது திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்!
சேது சமுத்திர திட்டத்தை தடையின்றி மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். அதில் மத்திய அரசுக்கு தயக்கமோ, ஊசலாட்டமோ ஏற்பட்டால் அதனை கண்டித்து மிகத்தீவிரமான போராட்டம் நடத்த இடது சாரிகள் முடிவு செய்துள்ளோம்.
தமிழகம் முழுவதும் மார்ச் 19ஆம் தேதி விவசாய தொழிலாளர்கள் குறித்த கோலப்பன் குழு பரிந்துரையை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்துகிறோம் என்று தா.பாண்டியன் கூறினார்.