''தி.மு.க. கூட்டணியில் டெல்லி மேல் சபைக்கு போட்டியிட பா.ம.க. சார்பில் சீட் கேட்பது நியாயம் அல்ல'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது, அடுத்து வரும் மாநிலங்களவை தேர்தலில் பா.ம.க.விற்கு ஓரிடம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. எந்த அளவிற்கு தி.மு.க. தன்னுடைய தோழமை கட்சிகளுக்காக தனது இடத்தை விட்டுக் கொடுத்தது என்பதை இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம்.
பா.ம.க. நிறுவனத்தலைவர் 21.2.2008 அன்று என்னை சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த போது, மாநிலங்களவை தேர்தல் குறித்தோ, அதிலே தங்கள் கட்சிக்கு ஓரிடம் வேண்டும் என்றோ கேட்கவே இல்லை மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதிலிருந்து இந்த தேர்தலில் பா.ம.க.விற்கு ஓரிடம் வேண்டும் என்று கேட்கும் எண்ணம் திடீரென்று 3.3.2008-ல் தான் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது விளங்குகிறது.
2006ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த நேரத்திலே கூட ஒவ்வொரு கட்சியுடனும் உடன்பாடு செய்து கொண்ட போது பா.ம.க.வுடன் செய்து கொண்ட உடன்பாட்டில் 31 சட்டமன்ற இடங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டதே தவிர, டெல்லி மேல்சபை உறுப்பினர் ஒன்று அவர்களுக்காக தரப்பட வேண்டும் என்று எந்த குறிப்பும் கிடையாது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது என்று வலியுறுத்திய காரணத்தால், அப்போது அவர்களை சமாதானப்படுத்துவதற்காக அடுத்து வரும் டெல்லி மேல்சபை தேர்தலில் ஒரு இடம் அவர்களுக்கு தருவதாக தி.மு.க. ஒப்புக் கொண்டது. அந்த வார்த்தையைக் காப்பாற்றிடும் வகையில் 2006-ம் ஆண்டு நடந்த டெல்லி மேல்சபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.
தற்போது கூட தி.மு.க. சட்டப்பேரவையில் 96 இடங்களைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தி.மு.க. ஆதரவோடு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒன்றை பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது 6 வாக்குகளையும் தி.மு.க.வுக்கு அளித்தாலே, இந்த மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. 3 உறுப்பினர்களை தன் கட்சியின் சார்பாக அனுப்பிட இயலும்.
ஆனால் அவ்வாறு கூட தி.மு.க. கேட்கவில்லை. தான் இரண்டு இடங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு, மீதமுள்ள 28 வாக்குகளையும், பா.ம.க. உள்ளிட்ட எஞ்சிய தோழமைக் கட்சிகளின் வாக்குகளையும் சேர்த்து தி.மு.க. இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி ஓர் இடத்திலும் போட்டியிடலாம் என்ற நிலையில் 2004-ம் ஆண்டு கூட்டணி ஆதரவோடு வெற்றி பெற்ற பா.ம.க. தற்போது ஓர் இடம் அவர்களுக்கு ஒதுக்க வேண்டுமென்று கேட்பது நியாயம் தானா?
டாக்டர் ராமதாஸ் தனது கடிதத்தில் கடந்த முறை அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்படவில்லை என்று எழுதியிருந்தார். அப்போது அதற்கான அவசியம் ஏற்படாததால் கூட்டப்படவில்லை. எனவே, அவர் இந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குவார் என்று நம்புகிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.