''சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடுவதை தடுக்கும் தீட்சிதர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்'' என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் நடராஜர் கோவில், தீட்சிதர்களின் சொந்த உடமை என்பது மிகப்பெரிய பித்தலாட்டம். 1982ஆம் ஆண்டு முதலே சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் நமது மன்னர்களால் கட்டப்பட்டது.
அத்தகைய கோவிலை தங்கள் உடமை என்று நீதிமன்றங்களில் தீட்சிதர் கூட்டம் வாதாடுவது முறையற்றது என்பதை ஏற்கனவே இந்து அறநிலையத்துறை எதிர்மனு போட்டு அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அதுபற்றி இந்து அறநிலையத்துறை தீவிர சட்ட நடவடிக்கைகளை எடுத்து மற்ற கோவில்களை போன்றதுதான் சிதம்பரம் நடராஜர் கோவிலும் என்பதை நிலை நிறுத்தி இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.
கோவில்களை பொறுத்தவரை அதனை இந்து அறநிலைய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் அவசியம். தேவாரம் பாடுவது உரிமை என்று அறிவித்த தமிழக அரசின் அறிவிக்கை பாராட்டத்தக்கது. தடுக்கும் தீட்சிதர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறைக்கு அனுப்ப தயங்க கூடாது. தமிழ்நாட்டு கோவில்களில் இப்படி ஒரு நிலை என்பது வெட்க கேடாகும் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.