ராமேஸ்வரம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் மீது சிறிலங்கக் கடற்படையினர் அத்து மீறி வந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதனால் ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
ராமேஸ்வரம் அருகில் உள்ள மண்டபம் பகுதியில் இருந்து இன்று காலை 465 மீனவர்கள் விசைப் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
மண்டபத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, மதியம் 2 மணிக்கு அத்து மீறி வந்த சிறிலங்கக் கடற்படையினர் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி அவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இதில் மண்டபத்தைச் சேர்ந்த கிருஸ்டி என்ற மீனவரின் வலது தலையில் குண்டடி பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை உடனிருந்த மீனவர்கள் உடனடியாகக் கரைக்குக் கொண்டு வந்தனர்.
மண்டபத்தில் மருத்துவ வசதி இல்லாததால் கிருஸ்டி ராமநாதபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இத்தகவல் அறிந்ததும் மண்டபம், ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையில் பதற்றம் ஏற்பட்டது. மண்டபம் பகுதி மீனவர் மீது சிறிலங்கக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.