நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை பங்கு பிரிப்பதில் கூட்டணி கட்சிகளிடையே சர்ச்சை எழும் என்பதால், வரும் 7-ம் தேதி நடப்பதாக இருந்த தி.மு.க., கூட்டணி கட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 'கூட்டத்திற்கான புதிய தேதி பிறகு அறிவிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மேல்சபையில் எம்.பி. ஆக உள்ள 56 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது.
அதில் தமிழகத்தில் இருந்து எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க.-வைச் சேர்ந்த என்.ஜோதி, சி.பெருமாள், சையதுகான், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய 4 பேரது பதவிக்காலமும், ஆர்.சண்முக சுந்தரம் (தி.மு.க.), ஜி.வாசன்(காங்கிரஸ்) ஆகியோரது பதவிக்காலமும் முடிகிறது. காலியாகும் இந்த 6 இடங்களுக்கு வருகிற 26-ந் தேதி தேர்தல் நடைபெறகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 8-ம் தேதி துவங்குகிறது.
மேல்சபை எம்.பி.க்களை அந்தந்த மாநில எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்ய உள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு வேண்டும்.
நாடாளுமன்றத்தில் தற்போதைய நிலவரப்படி தி.மு.க.-95, காங்கிரஸ்-35, பா.ம.க.-18, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்-9, இந்திய கம்யூனிஸ்ட்-6, விடுதலை சிறுத்தைகள்-2 என்று தி.மு.க. கூட்டணிக்கு 165 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அ.தி.மு.க. கூட்டணிக்கு அ.தி.மு.க.-60, ம.தி.மு.க.-6 என 66 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சுயேட்சை (தளி தொகுதி ராமச்சந்திரன்) ஒருவரும், தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் தனியாகவும் செயல்படுகிறார்கள்.
இதன்படி, தி.மு.க. கூட்டணிக்கு 4 எம்.பி. பதவி கிடைப்பதும், அ.தி.மு.க.வுக்கு ஒரு இடம் கிடைப்பதும் உறுதி. 6-வது எம்.பி. பதவியை பெறுவதில் தான் இழுபறி நீடிக்கிறது.
எம்.பி. பதவிக்கு தி.மு.க. கூட்டணி முயன்றால் கூடுதலாக 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வேண்டும். அ.தி.மு.க.வை பொறுத்தவரை,
ஒரு எம்.பி.யை தேர்வு செய்த பிறகு மீதம் 32 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். எனவே கூடுதலாக 2 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தால் அ.தி.மு.க. மேலும் ஒரு எம்.பி. பதவியை பெற முடியும்.
இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுக்கு ஒரு மேல் சபை எம்.பி. பதவி வேண்டும் என்று தி.மு.க.விடம் வலியுறுத்தியபடி உள்ளன. திடீரென காங்கிரஸ் கட்சியும் கூடுதலாக ஒரு எம்.பி. இடம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது தி.மு.க.வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான இடஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி முதல்வர் கருணாநிதியை தொடர்பு கொண்டு பேசிய சில மணிநேரத்தில்தான், கூட்டணி கட்சி கூட்டம் மறுதேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பா.ம.க. அவரசக் கூட்டம்!
ஆனால், பா.ம.க. நாளை அவசர நிர்வாகக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர் ராமதாஸ் கூறுகையில், "பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை செயலகத்தில் கடந்த 2 நாட்கள் முதலவர் கருணாநிதியை சந்தித்து பா.ம.க.வுக்கு மேல் சபை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கையை தெரிவித்தார். ஆனால் தி.மு.க. அதை ஏற்கவில்லை.
2004 பாராளுமன்ற தேர்தல் ஒப்பந்தப்படி, அன்பு மணிக்கு எம்.பி. இடம் கொடுக்கப்பட்டதாக தி.மு.க. விளக்கம் அளித்துள்ளது. 2004 ஒப்பந்தத்தில் 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஒப்பந்தமும் ஒரு பகுதிதான். அதன்மூலம் தான் தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தது. எனவே 2004ம் ஆண்டு ஒப்பந்தம் முடிவுக்கு வந்து விட்டது என்ற தி.மு.க.வின் வாதம் சரியல்ல.
2010-ம் ஆண்டில் பா.ம.க.வுக்கு எம்.பி. இடம் கொடுப்பது பற்றி பரிசீலிக்கலாம் என்று முதல்வர் கருணாநிதி, ஜி.கே.மணியிடம் கூறி உள்ளார். பா.ம.க.வுக்கு மேல்-சபை தேர்தலில் ஒரு இடம் வேண்டும் என்று கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நாளை தலைமை நிர்வாக குழு கூடுகிறது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும்" என்றார்.