சிதம்பரம் நடராஜர் கோயில் சித்சபை திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடிய 5 பேருக்கு தீட்சிதர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டதன் பேரில், கடந்த 2 ஆம் தேதி சிவனடியார் ஆறுமுகசாமி பாடச் சென்றபோது ஏற்பட்ட தகராறில் 12 தீட்சிதர்கள் உட்பட 44 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த பிரச்சனை முடிவதற்குள் இன்று மீண்டும் தேவாரம், திருவாசகம் பாடப்போவதாக மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் அறிவித்ததால் பதற்றம் நிலவியது.
இதையடுத்து நடராஜர் கோவிலை சுற்றியுள்ள 4 வீதிகளிலும் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
இன்று காலை 10.20 மணிக்கு மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட சில அமைப்புகைளச் சேர்ந்தவர்கள் சுமார் 100 பேர் தெற்கு ரத வீதியில் திரண்டு கோயிலுக்குள் நுழைய முயன்றனர். அப்போது தீட்சிதர்கள் 11 மணி வரை காலை பூஜை நடைபெற உள்ளதால் அதன் பிறகு பாடலாம் என தெரிவித்தனர்.
அதன்படி காலை 11.10 மணிக்கு 30 பேர் உள்ளே சென்றனர். 11.15 மணிக்கு ஆயுத களம் முருகன், பொய்கை அரசூர் சண்முகம் உள்ளிட்ட 5 பேர் சித்சபை திருச்சிற்றம்பல மேடையில் ஏறி தேவராரம், திருவாசகம் பாடினர். தீட்சிதர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
பின்னர், தேவாரம், திருவாசகம் பாடிவிட்டு வந்த 5 பேரையும், பொது தீட்சிதர் சார்பில் கோவில் செயலாளர் தன்வந்திரி தீட்சிதர் பொன்னாடைகளை போர்த்தி கவுரவித்தார்.