சிதம்பரம் நடராஜர் கோவில் சித்சிபை திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாட போதிய பாதுகாப்பு வழங்காத காவலர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிவனடியார் ஆறுமுகசாமி உள்ளிட்ட 9 பேர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் சித்சபை திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடச்சென்ற சிவனடியார் ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் தடுத்ததால் மோதல் உருவானது.
இதில் 11 தீட்சிதர்கள், சிவனடியார் ஆறுமுகசாமி, அவரது ஆதரவாளர்கள் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தீட்சிதர்கள் கடலூர் கிளைச் சிறையிலும், சிவனடியார் ஆறுமுகசாமி அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் கடலூர் மத்தியச் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாட போதிய பாதுகாப்பு வழங்கவில்லை. சிதம்பரம் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்வேலன் தீட்சிதர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறையில் சிவனடியார் ஆறுமுகசாமி மற்றும் 9 பேர் உண்ணாவிரதம் இருந்தனர். மீதம் உள்ள 23 பேர் நாளை, நாளை மறுநாள் சுழற்சி முறையில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில், வழக்கறிஞர்களின் மீது தடியடி நடத்திய காவலர்களைக் கண்டித்து கடலூரில் இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர். இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டது.