மத்திய, மாநில அரசுகள் தொடர் தொழிலாளர் விரோதப் போக்கினைக் கண்டித்து நீலகிரி மாவட்டக் கழகத்தின் சார்பில், நாளை இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலையின் தலைவாயில் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பிற்கு முக்கிய ஆதாரமாக உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலையைச் சீரமைக்க வேண்டும் என்று, நான் மத்திய அரசைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளேன். ஆனால், மத்திய அரசு இந்த தொழிற்சாலையை சீரமைக்க முன்வரவில்லை.
தற்போதைய தி.மு.க. அரசோ தொழிற்சாலையைக் காப்பாற்றவோ, தொழிலாளர் துயர் போக்கவோ எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. மேலும் தொழிற்சாலையை மூடி விடவும் தற்போது மத்திய அரசு ஆயத்தமாக உள்ளதாகத் தெரிய வருகிறது.
இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிலாளர்கள், தங்களது போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று எனக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். அவர்களது கோரிக்கையை ஏற்று இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலையை மறு சிரமைக்க வற்புறுத்தியும், மத்திய, மாநில அரசுகள் தொடர் தொழிலாளர் விரோதப் போக்கினைக் கண்டித்தும், நீலகிரி மாவட்டக் கழகத்தின் சார்பில், நாளை இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலையின் தலைவாயில் முன்பு மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம், கழக அமைப்புச்செயலர் ஈ.வெ.கி.சுலோச் சனாசம்பத் தலைமையிலும், நீலகிரி மாவட்டக் கழகச் செயலர் எம்.செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.