நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் ஆட்டோக்கள் சோதனையில் பிடிபட்டால் நிச்சயமாக ஏலம் விடப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
சென்னையில் நடந்த தமிழ்நாடு ஆட்டோ ரிக்ஷா, வாடகைக் கார் நல வாரியத்தின் 2-வது கூட்டத்திற்கு தலைமை வகித்த போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:
சென்னை நகரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓடும் ஆட்டோக்களை கண்டறிய ஒரே நாளில் 500 போக்குவரத்து துறை அதிகாரிகளை கொண்டு 40,000 ஆட்டோக்களில் சோதனை நடத்த உள்ளோம். தற்போது சென்னை நகரில் 10,000 முதல் 15,000 ஆட்டோக்கள் உரிமம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கின்றன.
ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களைப் பெறுவதற்கு வசதியாக இரண்டு மாதம் கால அவகாசம் அளிக்கிறோம். அதற்குள்ளாக மீட்டர் பொருத்தி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை வாங்க வேண்டும். சோதனையின் போது பிடிபடும் ஆட்டோக்கள் நிச்சயமாக ஏலம் விடப்படும்.
சென்னை நகரின் விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய 5,000 பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு 2600 பேருந்துகள் இருந்தன. தற்போது 3600 பேருந்துகளாக உயர்த்தி உள்ளோம். ஆட்டோ கட்டணம் அதிகமாக இருந்தால், ``பீடர் சர்வீஸ்'' முறையில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.