நகர்ப்புற மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் விரைவில் துவக்கப்படும். நகர்ப்புறங்களில் குடிசை வாழ் மக்களுக்கு சுகாதார காப்புறுதி வழங்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் செயல்படும் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் பற்றி சென்னையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்புமணி கூறியதாவது :
தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் விரைவில் துவக்கப்படவுள்ளது. நாட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் 429 உள்ளன. இதிலுள்ள மொத்த மக்கள் தொகை 22 கோடியாகும். இந்த புதிய திட்டத்தின்படி இந்நகரங்களில் குடிசைப் பகுதியில் வசிக்கும் சுமார் ஐந்தரை கோடி மக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
ஒவ்வொரு 2,000 மக்களுக்கு 'உஷா' என்றழைக்கப்படும் நகர்ப்புற சமூக சுகாதார பணியாளர் நியமிக்கப்படுவார். இதைப் போல 100 வீடுகளுக்கு ஒரு 'மகிளா ஆரோக்கிய சமிதி' என்ற குழு அமைக்கப்படும். ஒவ்வொரு குழுவுக்கு தலா ரூ.5,000 நிதி அளிக்கப்படும். இந்த நிதியின் மூலம் அந்த 100 வீடுகளுக்கு தேவையான சுகாதார வசதிகள் செய்து தரப்படும்.
இதுதவிர 50,000 மக்களுக்கு ஒரு சுகாதார மையம் அமைக்கப்படும். இதில் ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்கள், ஐந்து சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இந்த ஐந்தரை கோடி மக்களுக்கும் சுகாதார காப்புறுதி வழங்கப்படும். இத்துடன் அவர்களுக்கு சுகாதார அடையாள அட்டையும் வழங்கப்படும். அதன் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவையான மருத்துவ வசதிகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்காக ஐந்தாண்டுக்கு ரூ.8,000 கோடி நிதியுதவி கோரப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.
தமிழகத்தில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக சுகாதாரத் துறை ரூ.780 கோடி கேட்டுள்ளது. இது குறித்து வரும் மார்ச் 7-ம் தேதி டெல்லியில் நடக்கவுள்ள மத்திய-மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் அன்புமணி தெரிவித்தார்.