கடலுக்கு அடியில் உள்ள கனிம வளங்களைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பக் கப்பலான 'சாகர்நிதி' இன்று முறைப்படி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
கடலில் கனிம வளம் தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய கடல் தொழில்நுட்பக் கழகம் சார்பில் 'சாகர்நிதி' என்ற புதிய ஆராய்ச்சிக் கப்பல் வடிவமைக்கப்பட்டது. இத்தாலியில் தயாரிக்கப்பட்ட இந்தக் கப்பல் படந்த டிசம்பர் மாதம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 103 அடி நீளமும், 18 மீட்ர் அகலமும், 1,500 மெட்ரிக் டன் எடையும் கொண்ட இந்தக் கப்பலில் கணினி அறைகள், நவீன ஆய்வுக் கருவிகள் என எல்லா வசதிகளும் உள்ளன.
சென்னை துறைமுகத்தில் இன்று நடந்த விழாவில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில்சிபல், 'சாகர்நிதி' கப்பலை முறைப்படி நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, தேசியக் கடல் தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் கதிரொளி ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக அமைச்சர் கபில்சிபல் பேசுகையில், "இந்தியாவில் 7 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் கடல் பரப்பளவு உள்ளது. கடல் ஆராய்ச்சிப் பணிகளில் இந்தியாவுக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அனுபவம் உள்ளது.
அடுத்த தலைமுறைக்கு எரிசக்தி பிரச்சனை முக்கியமானது. அதனால் கடலின் கீழ் உள்ள எரிவாயுவை கண்டு பிடிக்கவும் அதை எடுத்து பயன்படுத்தவும் ஆய்வு நடத்தப்படும்" என்றார்.