தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பனிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கியது. இந்தத் தேர்வுகளில் முறைகேடுகள் நடக்காமலிருக்கும் வகையில், தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதன்முறையாக வினாத்தாள்களைப் படிப்பதற்கென கூடுதலாக 10 நிமிடங்கள், இந்த வருடத் தேர்வுகளில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 4,819 பள்ளிகளைச் சேர்ந்த 5,93,306 பேர் ப்ளஸ் - 2 தேர்வை எழுதுகிறார்கள். இதற்கென மொத்தம் 1,684 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு எழுதுவோரில் 3,11,281 பேர் மாணவியர். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 30,596 பேர் கூடுதலாகத் தேர்வு எழுதுகிறார்கள். மாணவியர் மட்டும் 19,186 பேர் இந்த ஆண்டு அதிகரித்துள்ளனர்.
தத்கால் திட்டப்படி விண்ணப்பித்தோர் 1,792 பேர் உள்பட தனித் தேர்வர்களாக மொத்தம் 49,460 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
சென்னை மாநகரில் 135 மையங்களில் மொத்தம் 45,891 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் மாணவியர் 25,279 பேர். புதுச்சேரியில் உள்ள 30 மையங்களில் 11,002 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் 5,845 பேர் மாணவியர்.
பொதுத் தேர்வு கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் கூறியதாவது :
மாணவர்கள் துண்டுத்தாள் வைத்திருந்தாலோ, துண்டுச் சீட்டைப் பார்த்து எழுதினாலோ, காப்பி அடித்தாலோ, தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்துகொண்டாலோ, தேர்வுத் தாள்களை மாற்றி மோசடி செய்தாலோ, ஆள் மாறாட்டம் செய்தாலோ கடுமையாகத் தண்டிக்கப்படுவர்.
தேர்வுகளில் முறைகேடு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அத்தகைய மாணவர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும். ஆள்மாறாட்டம் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும்.
தமிழகம் முழுவதும் வினாத்தாள்களைப் பாதுகாக்க 278 மையங்கள் உள்ளன. அவற்றின் பாதுகாப்பு குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் சரிபார்க்கிறார்கள். அங்கு 24 மணி நேரமும் போலீஸ் காவல் போடப்படும்.
இணை இயக்குநர்கள் தலைமையில் சிறப்புக் குழுக்கள் தேர்வு மையங்களைப் பார்வையிட்டு, கண்காணிக்கும். முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படைகள் செயல்படும்.
மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட கண்காணிப்பு உறுப்பினர்கள் தேர்வு மையங்களைக் கண்காணிப்பர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.