"தமிழகத்தில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அடுத்த தேர்தலிலும் தொடரும் " என்று தமிழகக் காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறினார்.
இது குறித்து சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மூன்றாவது அணி என்று யார் சொன்னாலும் அது நடைமுறைக்கு ஒத்துவராது. தமிழகத்தில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. அடுத்த தேர்தலில் இதே கூட்டணி தொடரும். தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்" என்றார்.
மத்திய பட்ஜெட் பற்றிக் கூறுகையில், "மத்திய பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கது. ஏழை, எளிய மக்களுக்கு ஏற்றம் தரும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான பட்ஜெட் என்று எல்லோரும் பாராட்டுகின்றனர். சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.60,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதை வேளாண் விஞ்ஞானி சாமிநாதனே பாராட்டி இருக்கிறார்" என்றார் கிருஷ்ணசாமி.
மேலும், மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டம் தனது தலைமையில் வருகிற 9-ந்தேதி மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடக்கும் என்றும், அதில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.