மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், மக்கள் விரோத பட்ஜெட் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இதர விவசாயிகள் ஒரே தவணையில் தங்களது கடனைச் செலுத்த முன்வந்தால், அதில் 25 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
புதிதாக விவசாயக் கடன்கள் வாங்குவதற்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கடன் தள்ளுபடி குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு. தள்ளுபடி செய்யப்பட்ட கடனால் ஏற்படும் சுமையை யார் தாங்குவது என்பதை அமைச்சர் விளக்கவில்லை.
வங்கிக் கடன் வாங்கி, அதை முறையாகச் செலுத்தும் விவசாயிகளுக்கு எந்த நிவாரணத்தையும் குறிப்பிடவில்லை. தற்கொலை செய்யும் விவசாயிகளில் பெரும்பாலானோர் வட்டிக்கு கடன் கொடுப்பவர்களிடம் கடன் வாங்கியுள்ளனர். கடன் தள்ளுபடி வரம்புக்குள் அவர்கள் வரமாட்டார்கள். பெரும் எண்ணிக்கையிலான இந்த விவசாயிகளை காப்பாற்ற அரசிடம் உள்ள திட்டம் என்ன? இதுகுறித்து எந்தத் திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்து, எனது ஆட்சிக் காலத்திலேயே மத்திய அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ.ராசா, அரசியல் காரணங்களுக்காக அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டார். தாமதம் காரணமாக, தற்போது அந்தத் திட்டத்துக்கான தொகை அதிகரித்துள்ளது. இதற்கு, நிதியமைச்சரின் பதில் என்ன?
மத்திய அரசின் பொது பட்ஜெட், மக்கள் விரோத பட்ஜெட் ஆகும். ஏழை மற்றும் சாமான்ய மக்களின் தலையில் சுமையை ஏற்றுகின்ற பட்ஜெட்.
தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தும், தமிழகத்துக்கு எதுவும் நடக்கவில்லை. தமிழகத்தில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் அமைப்பதற்கான அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் கூறப்படவில்லை.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 1,500 கோடி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு, திமுக அரசு கடிதம் எழுதியது. ஆனால், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை.
நாட்டை எவ்விதம் முன்னெடுத்துச் செல்லப் போகிறார்கள் என்பது குறித்து தெளிவாக எதுவும் கூறவில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.