'மதுக்கடைகள் மூலம் அல்லாமல் மாற்று வழியில் அரசிற்கு வருமானம் வருவதற்கான திட்டம் என்னிடம் உள்ளது' என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருப்பூரில் நடந்த மது ஒழிப்புப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், "மது பாட்டிலில் மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று எழுதி வைத்துவிட்டு, மக்களே நன்றாகக் குடியுங்கள். அதில் வரும் வருமானத்தில் தான் நலத்திட்ட உதவிகள் செய்ய முடியும் எனக் கூறுவது சரியா?" என்று கேள்வி எழுப்பினார்.
மதுக்கடைகள் மூலமாக அரசிற்கு வருகிற ரூ.7,441 கோடி ரூபாய் நிதியை வைத்து தான் நலத்திட்ட உதவிகளை வழங்க முடியும் என்பது சரியல்ல என்று கூறிய ராமதாஸ், மதுக்கடைகள் இல்லாமல் மாற்று வழிகள் மூலம் அரசிற்கு வருமானம் வரத் தேவையான திட்டங்கள் தன்னிடம் உள்ளதாகத் தெரிவித்தார்.