மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் உடலுக்கு முதல்வர் கருணாநிதி, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இன்று அஞ்சலி செலுத்தினர்.
பிரபல எழுத்தாளர் சுஜாதா நேற்று முன்தினம் உடல் நலக்குறைவினால் மரணமடைந்தார். அவரது 2 மகன்களும் அமெரிக்காவில் இருந்ததால், சுஜாதாவின் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மகன்கள் திரும்பியதை அடுத்து சுஜாதாவின் உடல் சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வர பூங்கா அருகில் உள்ள அவரின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு அவரின் உடலுக்குத் தமிழக முதல்வர் கருணாநிதி, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கவிஞர் வைரமுத்து, ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், நடிகர்கள் ரஜினி, கமலஹாசன், சிவகுமார், பார்த்திபன், கார்த்திக், விவேக், சாருஹாசன், நடிகை சுகாஷினி, இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், எழுத்தாளர்கள் பாலகுமாரன், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.
இதையடுத்து சுஜாதாவின் உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.