''தமிழ்நாடு முழுவதும் ஓடாத நிலையில் இருக்கும் 241 தேர்களை பழுது பார்த்து ஓட்டுவதற்கு 15 கோடி ரூபாயை முதலமைச்சர் கருணாநிதி ஒதுக்கியுள்ளார்'' என்று அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆறு மாதங்களுக்கு முன்பு இயற்கை சீற்றத்தால் ராஜகோபுரத்தின் கிழக்கு பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டது. ஆகம விதிகளின்படி ராஜகோபுரத்தைச் சீர் செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஓடாத நிலையில் இருக்கும் 241 தேர்களை பழுது பார்த்து ஓட்டுவதற்கு ரூ.15 கோடி முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார். உள்ளாட்சித்துறை மூலம் கோவில் தெப்பக்குளங்கள் தூர் வாரப்பட்டுகிறது. சுற்றுலாத்துறையும் பல கோயில்களில் அடிப்படை வசதிகளை செய்து வருகிறது என்று அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.