பிரபல எழுத்தாளர் சுஜாதா மறைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புகழ்பெற்ற எழுத்தாளர் சுஜாதா இயற்கை எய்திய செய்திகேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். ரங்கராஜன் எனும் இயற்பெயர் கொண்ட இவர் தமது துணைவியார் பெயரையே சுஜாதா எனப் புனைபெயராகக் கொண்டு எழுதினார்.
கணினி அறிவாற்றல் மூலம் அறிவியல் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்துள்ளவர்; பெல் நிறுவனத்தில் பணியாற்றிய பொழுது இவரது தலைமையிலான குழுவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கியது என்பதுகுறிப்பிடத்தக்கது. சுஜாதா மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். இவரது பிரிவால் வாடும் இவரது குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
வைகோ
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் செய்தியில், அறிவியல் கருத்துகளைத் தனது கதைகள் மூலம் அறிந்து கொள்ள சுஜாதா ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. திருக்குறள், சிலப்பதிகாரம், புறநானூறு, குறுந்தொகை, வைணவப் பாசுரங்களுக்கு எளிய நய உரைகளை வழங்கியவர். திரைப்படத் துறையிலும் வசனங்கள் எழுதி முத்திரை பதித்தார். அவர் மறைந்த செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறேன். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.