2006- 07ஆம் ஆண்டுக்கான தேசிய சுற்றுலா விருது தமிழக அரசின் சுற்றுலாத் துறைக்கு கிடைத்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் சுற்றுலாத் துறை வளர்ச்சி திட்டங்கள், சிறந்த விளம்பர யுக்திகள் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய சுற்றுலா அமைச்சகம் தேசிய சுற்றுலா விருதுகளை வழங்கி வருகிறது.
இந்த வகையில் 2006-07ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊரக சுற்றுலாத் திட்டமாக சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செட்டிநாடு சுற்றுலா திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கான சிறந்த விளம்பர யுக்தி நிறுவனமாக தமிழக சுற்றுலாத் துறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் விக்யான் பவனில் இன்று நடைபெற்ற விழாவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த விருதுகளை வழங்கினார். இதை தமிழக சுற்றுலாத் துறை செயலர் வி.இறையன்பு, சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையர், நிர்வாக இயக்குனர் எம்.ராஜாராம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.