''காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிக்கு மாற்றான பொருளாதார கொள்கை உடைய அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து 3வது மாற்று சக்தியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஆர்.உமாநாத், தமிழ் மாநில செயலாளர் என்.வரதராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது அகில இந்திய மாநாடு கோவையில் மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஆர்.உமாநாத், மாநில செயலாளர் என்.வரதராஜன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மார்க்சிஸ்ட் கட்சியின் 19வது அகில இந்திய மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. 34 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். மத்தியில் உள்ள அரசை பொறுத்தவரை பொதுவான ஆதரவு கட்சியாக நாங்கள் இருந்து வருகிறோம். அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் பொருளாதார கொள்கை மக்களுக்கு விரோதமாக இருப்பதால் அதனை எதிர்த்து வருகிறோம். அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்க்கிறோம்.
காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிக்கு மாற்றான பொருளாதார கொள்கை உடைய அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து 3வது மாற்று சக்தியை உருவாக்கும் முயற்சியில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக தற்போது மத்திய கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றுள்ள தி.மு.க உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க அரசின் மக்கள் நலம் பயக்கும் திட்டங்களை வரவேற்கும் அதே வேளையில், அவற்றை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இலவச மனைப்பட்டா வழங்குதல், தரிசு நிலம் வழங்குதல் ஆகிய திட்டங்களை இடைத் தரகர்கள் தலையீடு இன்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று அவர்கள் கூறினர்.