''பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்து முன்னேற கல்வி மிகவும் அவசியம்'' உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற ராணி மேரி கல்லூரியின் 91-வது பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்களையும், பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பதக்கங்களையும் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், பொறியியல் கல்லூரிகளில் இன்று படிப்பவர்களில் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக உள்ளனர். எப்போதுமே ஆதிக்கம் செலுத்துபவர்கள் அவ்வளவு எளிதில் உரிமைகளை கொடுத்துவிடமாட்டார்கள். அரசியல் என்றாலும் சரி, சாதி என்றாலும் சரி இதே நிலைதான். பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்து முன்னேற கல்வி மிகவும் அவசியம்.
கல்வி மேம்பாட்டுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தரத்தை உயர்த்த வேண்டும். படிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் அரசின் கல்விக்கொள்கை. இதற்காக அரசு கல்லூரிகளில் ஷிப்டு முறையை கொண்டுவந்து மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி உள்ளோம்.
மாணவர்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே பாலிடெக்னிக்கில் சேர்ந்து தங்களுக்கு பிடித்தமான ஏதாவது தொழிற்கல்வியில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் பயிற்சியை படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதே போல், ஒரு குறிப்பிட்ட பாடத்தில் சிறந்துவிளங்கும் வகையில் ஒவ்வொரு கல்லூரியிலும் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும்.
இதன்மூலம் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மற்றொரு பாடத்தை வேறொரு கல்லூரியில் உள்ள சிறப்பு மையத்திற்கு சென்று படித்துக்கொள்ளலாம். சோதனை முயற்சியாக சென்னை உள்ள 4 அரசு கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டிலிருந்து இந்த வசதி கொண்டுவரப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.