கிராமங்களில் மாலை 6 மணிக்கு மேல் எந்த காரணத்தை கொண்டும் மின்தடை ஏற்படாது என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இன்றைய நிலவரப்படி தமிழகத்துக்கு தினமும் 8 ஆயிரத்து 900 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் உற்பத்தி செய்யப்படுவது 8ஆயிரத்து 600 மெகாவாட். பற்றாக்குறையில் 300 மெகா வாட் மின்சாரம் இருந்து வருகிறது.
கோடையில் மின் தேவையை சமாளிக்க மார்ச்சில் இருந்து 250 மெகாவாட் மின்சாரம் அஸ்ஸாம், ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து வாங்கப்படுகிறது. 400 மெகாவாட் மின்சாரம் ஏப்ரல் மாதத்தில் வாங்கப்படும். மேலும் 500 வாட் மின்சாரம் மே மாதத்துக்கு மத்தியில் தேவைப்படும்.
ராமநாதபுரம் மாவட்டம் வனத்தூர் என்ற இடத்தில் 100 மெகா திறன் கொண்ட எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளதால் அதிலிருந்து 100 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். மே மாதம் மத்தியில் பருவ காலம் ஆரம்பித்து விடுவதால் காற்றாலை மூலம் மின் உற்பத்தி தொடங்கி விடும். இதனால் மின்தடை ஏற்படாது.
நகரம், கிராமத்தில் ஒரு மணி நேரம் மின் நிறுத்தம் ஏற்படும். ஆனால் மாலை 6 மணிக்கு மேல் எந்த காரணத்தை கொண்டும் மின்சாரத்தை தடை செய்யக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு படிப்பதால் மின் தடை இரவில் இருக்காது" என்றார்.