நாடாளுமன்றத்தின் நிதிநிலைக் கூட்டத் தொடரின் துவக்க நிகழ்ச்சியாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நாளை உரை நிகழ்த்துகிறார். இதற்காக பிரதீபா பாட்டீலை பாராட்டி தமிழக முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரதீபாபட்டீல் நாளை தொடங்கும் நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் உரை நிகழ்த்துகிறார். இந்திய நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதீபாபட்டீல் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபாபட்டீலுக்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதீபாபட்டீலுக்கு கருணாநிதி அனுப்பியுள்ள கடிதத்தில், இந்தியா குடியரசு நாடாகி 58 ஆண்டுகள் ஆகின்றன. இந்திய நாடாளுமன்றத்தின் கலப்பு கூட்டத்திலும் நீங்கள் நாளை உரை நிகழ்த்தப் போகிறீர்கள்.. இந்திய நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த போகும் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் நீங்கள்தான்.
இந்திய ஜனநாயகத்தில் இது ஒரு மகத்தான நாள். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. இந்த புதிய மாற்றத்துக்கு மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாளையொட்டி தமிழக மக்களின் சார்பில் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.